
சென்னை: பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரின் முடியில் டிஎன்ஏவை டெஸ்ட் செய்து பார்த்து விட்டேன். அவர்களது டிஎன்ஏவும், சக இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றாகவே உள்ளன. எனவே மராத்தியர்கள், பிற இந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று இனியும் தாக்கரேக்கள் கூறிக் கொண்டு திரியக் கூடாது என்று தடாலடியாக கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி.
எல்லோரும் ஒரு பக்கம் போனால் சாமி மட்டும் இன்னொரு பாதையில் போய்க் கொண்டிருப்பார். அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் பெரும் எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கரேக்கள் விடும் சவுண்டுப் பிரச்சினையை புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சாமி.
அது என்ன என்பதை அவரது வாயாலேயே கேட்போம்...
பிற இந்தியர்களிடமிருந்து தாங்கள் மரபணு ரீதியாக (genetic make-up) வேறுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க பால் தாக்கரே முன்வர வேண்டும். அதை விடுத்து மராத்தியர்கள், மராத்திய தர்மம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
தாக்கரே குடும்பத்தினரின் டி.என்.ஏவும், எனது டி.என்.ஏவும், உ.பியில் உள்ளோரின் டிஎன்ஏவும் ஒன்றுதான். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான மரபணுதான்.
இதை நான் வெறுமனே சொல்லவில்லை. தாக்கரேக்களுக்கு முடிவெட்டுவோரிடமிருந்து அவர்களது முடியை சேகரித்து ஹைதராபாத் ஜீன் க்ளீனிக்கில் சோதனை செய்து பார்த்தேன். அதில்தான் இந்த உண்மை தெரிய வந்தது.
எனவே வெறுமனே பேசிக் கொண்டிருக்கக் கூடாது தாக்கரேக்கள்.
மும்பை மராத்திகளுக்கே என்று சிவசேனா சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டித்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தான் ஒரு தேசப்பற்றுள்ள தலைவர் என்பதை நிரூபித்து விட்டார்.
அனைத்து இந்தியர்களும் பாரத அன்னையின் புதல்வர்கள், மதம், பிராந்தியம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்தியர்கள் என்பதை அவர் தெளிவாக கூறி விட்டார். இதைப் பாராட்டுகிறேன்.
உண்மையில் மராத்தி மொழியில் 70 சதவீத சமஸ்கிருத வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. எனவே பிற இந்திய மொழிகளைப் போலவே மராத்தியும் ஒரு இந்திய மொழிதான்.
தமிழில் கூட 44 சதவீத சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. மேலும், மராத்தி மொழியின் எழுத்து வடிவம் தேவநாகரியிலிருந்து எடுக்கப்பட்டது. தேவநாகரி, சமஸ்கிருத்தத்தின் ஒரு பகுதி.
எனவே மராத்தி, மராத்தி தர்மம் என்றெல்லாம் வாத்துப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதை தாக்கரேக்கள் கைவிட வேண்டும். மாறாக, தீவிரவாதிகளுக்கு எதிராகவும், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளிடமிருந்தும் நாட்டை மீட்கும், காக்கும் முயற்சியில் அனைவருடனும் இணைந்து செயல்பட அவர்கள் முன்வர வேண்டும் என்றார் சாமி.
0 comments:
Post a Comment