29 April 2011

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி

மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.

அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர்(மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.

இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி (Memory) கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.

இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.

ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More