20 January 2010

நச்சென்று கதை எழுதுவது எப்படி? by wathani

நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன?

அவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.

இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.

சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என்பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.

அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.

எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.

இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.

மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.

அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.

கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :

அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே! உயிருக்கிறது இன்னமும்! ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :

எப்படிக் கொலை செய்வது?

(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More